மாற்றுத்திறனாளிக்கு உதவிய கலெக்டர்


மாற்றுத்திறனாளிக்கு உதவிய கலெக்டர்
x

கோரிக்கை விடுத்த 30 நிமிடத்தில் மாற்றுத்திறனாளிக்கு வீடு கட்டிக்கொடுக்க உத்தரவிட்டு நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் உதவினார்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

கோரிக்கை விடுத்த 30 நிமிடத்தில் மாற்றுத்திறனாளிக்கு வீடு கட்டிக்கொடுக்க உத்தரவிட்டு நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் உதவினார்.

மாற்றுத்திறனாளி

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் கிராமத்தில் அழகு கவுண்டர் தெருவில் வசித்து வருபவர் நாகவள்ளி (வயது68). இவருடைய கணவர் மாரியப்பன். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகன் பாலசுப்பிரமணியன் (30) மாற்றுத்திறனாளி. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் மாரியப்பன் உயிரிழந்து விட்டார். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

மாற்றுத்திறனாளி மகனுடன், நாகவள்ளி ஒரு குடிசையில் வசித்து வருகிறார். இவர் எந்தவித வருமானமும் இன்றி தனது மகள்கள் மற்றும் மருமகன்கள் கொடுக்கும் பண உதவியுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்.இவர்களும் ஏழ்மை நிலையில் உள்ளதால் நாகவள்ளிக்கு உதவமுடியாத நிலையில் உள்ளனர்.

வீடு வழங்க உத்தரவு

மாற்றுத்திறனாளி மகனை வைத்து கொண்டு கஷ்டப்படும் நாகவள்ளி குறித்து அறிந்த வேதாரண்யம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவக்குமார் என்பவர், நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் சென்று கலெக்டர் அருண்தம்புராஜை சந்தித்து அவரிடம் நாகவள்ளி மற்றும் அவரது மகன் குறித்து தெரிவித்தார். மேலும் நாகவள்ளி வீடு, மாற்றுத்திறனாளி மகன் பாலசுப்பிரமணியன் குறித்து செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோவை கலெக்டரிடம் காண்பித்தார்.

இதை தொடர்ந்து கலெக்டர் தனது செல்போனில் வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரை தொடர்பு கொண்டு மாற்றுத்திறனாளி பாலசுப்பிரமணியனுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டி கொடுக்க ஆவணங்களை சரிபார்த்து உடன் வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

உதவித்தொகை

பின்னர் சுகாதாரத்துறை துணை இயக்குனரை ெதாடர்பு கொண்டு நாகவள்ளி குடும்பத்திற்கு வேண்டிய அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்ய உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடமும், பாலசுப்பிரமணியனுக்கு வேண்டிய பொருட்களை வழங்க வேண்டும். 5 மாதமாக நிறுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உதவிதொகையை மாதந்தோறும் அவரது வீட்டுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அனைத்து அரசு அதிகாரிகள் மாற்றுத்திறனாளி பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு சென்று அனைத்து உதவிகளுக்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கலெக்டருக்கு பாராட்டு

கோரிக்கை விடுத்த 30 நிமிடத்தில் மாற்றுத்திறனாளிக்கு உதவிய கலெக்டர் அருண்தம்புராஜிக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுசமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மாற்றுதிறனாளிகளுக்கு சிறந்த சேவையாற்றியதற்கு கலெக்டர் அருண்தம்புராஜிக்கு விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story