நுகர்வோர் பொருட்களை வாங்கும் போது விழிப்புடன் இருக்க வேண்டும் கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவுரை


நுகர்வோர் பொருட்களை வாங்கும் போது விழிப்புடன் இருக்க வேண்டும் கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவுரை
x
தினத்தந்தி 7 April 2023 6:45 PM GMT (Updated: 7 April 2023 6:47 PM GMT)

நுகர்வோர் பொருட்களை வாங்கும்போது விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவுரை வழங்கினார்.

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடந்தது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இடையே நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தினத்தையொட்டி நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசியதாவது:-

சமரச மையம்

புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இது நுகர்வோர் பாதுகாப்பில் ஒரு மைல் கல்லாகும். இந்த புதிய சட்டத்தில் 3 புதிய பிரிவுகள் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதாவது, பொருட்களில் ஏதேனும் சேதாரம் இருந்து, அதனால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அது உற்பத்தியாளரின் பொறுப்பாகும்.2-வதாக நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படுவது, 3-வதாக சமரச மையமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் அனைத்து சரக்கு மற்றும் சேவைகளுக்கும் பொருந்தும். வீடு வாங்குவது, வீடு கட்டுவது, தொலைத்தொடர்பு சேவைகள், ஆன்லைன் மூலம் வாங்கும் பொருட்கள், டெலி சாப்பிங், நேரடி விற்பனை, மல்டி லெவல் மார்க்கெட்டிங் என அனைத்தும் புதிய சட்டத்தின் கீழ் வரும். ஒரு நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் சேவையினால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு எற்படுத்தும் பட்சத்தில் புதிய சட்டத்தின் கீழ் நுகர்வோர் இழப்பீடு பெற முடியும்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

வடிவமைப்பு குறைபாடு, பொருள் தயாரிப்பில் விதிமுறைகளை பின்பற்றாதது, பொருளை எப்படி பயன் படுத் துவது ஆகியவைகளை குறிப்பிடாதது உள்ளிட்ட சில காரணங்களுக்கும், நுகர்வோர் இழப்பீடு பெற முடியும். பழைய விதிகளின் கீழ் இழப்பீடு பெறுவதற்கு அனைத்து காரணங்களையும் நிரூபித்தாக வேண்டும். ஆனால் புதிய சட்டத்தில் ஏதேனும் ஒரு காரணத்தை நிரூபிக்கும் பட்சத்தில் இழப்பீடு கோர முடியும்.

பள்ளி, கல்லூரிகளில் உள்ள நுகர்வோர் மன்றங்கள், இளைஞர்களிடையே நுகர்வோர் உரிமைகள் குறித்த அறிவையும், திறமைகளையும் உருவாக்க வேண்டும். பொருட்களின் தரக் கட்டுபாடு விதிகள் மற்றும் சந்தையறிவு பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும். சட்ட விரோதமான வணிக முறைகளால் நுகர்வோர் பாதிக்கப்படுவதை தவிர்ப்பது குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஆகவே ஒவ்வொரு நுகர்வோரும் பொருட்கள் வாங்கும் போது விழிப்புடனும், விதிமுறைகளினை பின்பற்றியும் வாங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உதயகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அலுவலர் கைலாஷ்குமார், தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் ராஜசேகரன் மற்றும் நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story