தாம்பரத்தில் இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்
இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு தாம்பரத்தில் நடைபெற உள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஆண்கள், விமானப்படை குழு 'ஒய்', மருத்துவ உதவியாளர் பிரிவில் சேர்ப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கான ஆட்சேர்ப்பு தேர்வு சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை வெவ்வேறு தேதிகளில் நடைபெற உள்ளது.
மருத்துவ உதவியாளர் பணிக்கான தேர்வுக்கு செல்ல விரும்புபவர்கள் திருமணம் ஆகாதவராகவும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்துடன் 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். 27.6.2002 முதல் 27.6.2006 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும் இருக்கவேண்டும்.
மருத்துவ தேர்வு
இப்பணிக்கு தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு உடற்தகுதித்தேர்வு, எழுத்துத்தேர்வு (2 நிலைகள்) மற்றும் மருத்துவத் தேர்வு ஆகிய தேர்வுகள் வருகிற 1 மற்றும் 2-ந் தேதிகளில் நடத்தப்படும்.
மேலும் 12-ம் வகுப்பு கல்வித்தகுதியுடன் டிப்ளமோ, பி.எஸ்சி., பார்மசி பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12-ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பார்மசி படித்து முடித்த திருமணம் ஆகாதவர்களாக இருப்பின் 27.6.1999 முதல் 27.6.2004 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும், திருமணமான விண்ணப்பதாரர்கள் எனில் 27.6.1999 முதல் 27.6.2002 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.
பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.14,600 வழங்கப்படும். பயிற்சியின் முடிவில், ராணுவ சேவை ஊதியம் உள்பட குறைந்தபட்ச மொத்த ஊதியம் ரூ.26,900 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கலாம்
இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு உடற் தகுதித்தேர்வு, எழுத்துத்தேர்வு (2 நிலைகள்) மற்றும் மருத்துவத்தேர்வு ஆகிய தேர்வுகள் வருகிற 7 மற்றும் 8-ந் தேதிகளில் நடத்தப்படும். இதில் கலந்து கொள்பவர்களுக்கு உயரம் 152.5 செ.மீட்டர் இருக்க வேண்டும். எனவே ஆர்வமுள்ளவர்கள் https://airmenselection.cdac.in/CASB/என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தேர்வுமுறை, தேர்வு நாளன்று எடுத்து செல்லவேண்டிய ஆவணங்கள் உள்பட அனைத்து விவரங்களையும் அறிந்த பின்பு, தகுதியுடையவர்கள் மட்டும் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களை கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரில் அல்லது 04142-290039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.