நெல் மூட்டைகளின் எடையை கலெக்டர் ஆய்வு


நெல் மூட்டைகளின் எடையை கலெக்டர் ஆய்வு
x

மயிலாடுதுறை அருகே கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்ைடகளின் எடையை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை அருகே கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்ைடகளின் எடையை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

வளர்ச்சி பணிகள்

மயிலாடுதுறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பாண்டூர் மற்றும் கொற்கை ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 91 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பாண்டூர் ஊராட்சியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழலகம் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு பணியின் தரத்தை ஆய்வு செய்தார்.

சாலை அமைப்பு

தொடர்ந்து முதல்- அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் பாண்டூர் - கொற்கை சாலை அமைக்கும் பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் புத்தகாரம் சாலை அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் ஆய்வு செய்து பணிகளை ஒப்பந்தகாலக்கெடுவிற்குள் முடிக்க அறிவுறுத்தினார். பின்னர் கொற்கை ஊராட்சியில் ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்ட கலெக்டர் மகாபாரதி கொற்கை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில் நெற்களம் கட்டப்பட்டுள்ளதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் ஓமக்குளம் படித்துறை, சுற்றுசுவர் உள்ளிட்டவைகளுடன் மேம்படுத்தப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டையின் எடையை எடை அளவு எந்திரத்தில் வைத்து ஆய்வு செய்து, மூட்டையின் அளவு விவரங்களை நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியரிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, உதவி பொறியாளர் பூங்குழலி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இருந்தனர்.

பள்ளியில் ஆய்வு

கொள்ளிடம் அருகே மணலகரம் கிராமம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேற்று ஆய்வு செய்தார். பள்ளியின் கட்டிட வசதி, வகுப்பறைகளின் காற்றோட்ட வசதி, கழிவறை வசதி மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த கலெக்டர் 10-ம் வகுப்பில் மாணவர்கள் கல்வி பயின்று வரும் அறைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மற்றும் ஆசிரியர்கள் இருந்தனர்.


Next Story