விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு கலெக்டர் ஆறுதல்
விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு கலெக்டர் ஆறுதல் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சன்டியூர் என்ற இடத்தில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சராகி நின்று கொண்டிருந்த சுற்றுலா வேன் மீது லாரி மோதிய விபத்தில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
மரணமடைந்த மீரா, தெய்வானை, சேட்டம்மா ஆகிய 3 பேரின் உடல்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்த தகவல் அறிந்த வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அரசு சார்பில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் தமிழக அரசு அறிவித்திருப்பதாக கூறினார்.
அப்போது திருப்பத்தூர் கோட்டாட்சியர் பானுமதி, வாணியம்பாடி அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் சிவசுப்பிரமணியம் உள்பட பலர் உடன் இருந்தனர்.