தேர்நிலை மண்டபத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார்


தேர்நிலை மண்டபத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார்
x

தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த தேர்நிலை மண்டபத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு, சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

தஞ்சாவூர்

தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த தேர்நிலை மண்டபத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு, சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

தேர்நிலை மண்டபம்

தஞ்சையில் தேரோடும் வீதிகளான நான்கு ராஜவீதிகளிலும் தேர்முட்டி எனப்படும் தேர்நிலை மண்டபங்கள் உள்ளன. மிகவும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவைகளைக் கொண்டு சுதை சிற்பங்களாக இது கட்டப்பட்டுள்ளது. தேரோட்டம் நடைபெறும்போது இந்த தேர்நிலை மண்டபம் அருகே வந்து தேர் நிற்கும்.

100 ஆண்டுகளுக்கு மேல் தேரோட்டம் நடைபெறாமல் இருந்ததால் இந்த தேர் நிலை மண்டபங்கள் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை மேலவீதியில் உள்ள விஜயராமர் கோவில் தேர் நிலை மண்டபம், கொங்கணேஸ்வரர் கோவில் தேர் நிலை மண்டபம், சங்கரநாராயணன் கோவில் தேர்நிலை மண்டபம், வீர அனுமன் கோவில் தேர் நிலை மண்டபம் ஆகியவை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு தமிழக தொல்லியல் துறையின் அனுமதியோடு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

கலெக்டர் பார்வையிட்டார்

3 ராஜ வீதிகளில் தேர்நிலை மண்டபம் மீட்கப்பட்ட நிலையில், கீழராஜ வீதியில் உள்ள மண்டபம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததால் அது எங்கு இருக்கிறது என அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். கீழராஜ வீதியில் உள்ள பெருமாள் கோவில் எதிரே தேர் நிலை மண்டபம் ஒன்று இருந்தது வரலாற்று ஆவணங்களின் ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து கீழராஜ வீதியில் சாமந்தன் குளம் செல்லும் அந்தப் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த தேர்நிலை மண்டபம் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு டீக்கடை நடத்தப்பட்டு வந்தது.

அந்த தேர் நிலை மண்டபத்தை தஞ்சை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த தேர்நிலை மண்டபம் இருந்த பகுதி 696 சதுரஅடி பரப்பளவு கொண்டதாகும். இதையடுத்து மண்டபத்தை கண்டுபிடித்த அதிகாரிகள், அதில் தேர்முட்டி என நோட்டீசும் ஒட்டியதுடன் அதில் செயல்பட்ட டீக்கடையையும் பூட்டினர். இந்தநிலையில் இந்த தேர்நிலை மண்டபத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று பார்வையிட்டார். மேலும் பூட்டிய கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த அவர், இதற்கு சீல் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.


Next Story