ஊட்டியில் கோடை கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்
ஊட்டியில் கோடை கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் கார்மேகம் கலந்துரையாடினார்.
சேலம்,
கோடை கொண்டாட்டம்
பள்ளிக்கல்வித் துறை சார்பில் 5 நாட்கள் ஊட்டியில் 'கோடை கொண்டாட்டம்' என்ற பெயரில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் இருந்து கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு வழியனுப்பு விழா நேற்று சேலத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி வழியனுப்பி வைத்தார்.
அப்போது அவர் கூறும் போது, 'முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்க, கோடை விடுமுறையை பயனுள்ளதாகவும், பயன்படுத்திக்கொள்ளவும், கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் மலை சுற்றுலா தலங்களில் நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி சிறப்பு பயிற்சி முகாமில் சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 படிக்கும் அரசு பள்ளியை சேர்ந்த 39 மாணவர்கள், 33 மாணவிகள் என மொத்தம் 72 பேர் தற்போது ஊட்டிக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்' என்றார்.
கலந்துரையாடினார்
முன்னதாக முகாமில் பங்கேற்க செல்லும் மாணவ, மாணவிகளிடம் கலெக்டர் கார்மேகம் கலந்துரையாடினார். இதில் முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், உதவி கலெக்டர் கனிமொழி, அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட துணை மேலாளர் கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.