இளம் தொழில் முனைவோர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்

பாளையங்கோட்டையில் இளம் தொழில் முனைவோர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல் நடத்தினார்.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் நெல்லை மண்டலம் சார்பில், பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் புத்தொழில் நிறுவனங்கள், இளம் தொழில்முனைவோர் மற்றும் தொழில் ஆர்வம் உள்ள இளைஞர்களுடன் கலெக்டர் கார்த்திகேயன் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், ''மாணவர்களின் தொழில் திறனை ஊக்கப்படுத்தி வெளி உலகிற்கு தெரியப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக கண்காட்சி நடத்தப்பட்டு இந்த இயக்கத்தினை ஊக்கப்படுத்தப்படும். இந்த புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் சிறுதொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை பெரும் நிறுவனங்களாக உருவாக்கி கொள்ள முன்வர வேண்டும். இளைஞர்கள் புதிய தொழில் தொடங்குவதற்கு முன் வர வேண்டும்''- என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை ஆணையர்) சுகன்யா, அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






