திட்டப்பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு
அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் திட்டப்பணிகளை கலெக்டர் வளா்மதி ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பாராஞ்சி ஊராட்சியில் ரூ.4.90 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கான கழிப்பறை கட்டும் பணி, ரூ.7.72 லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைக்கும் பணி மற்றும் ரூ.3.97 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளையும், பாராஞ்சி பெரிய மோட்டூர் பகுதியில் ரூ.6.16 லட்சம் மதிப்பீட்டில் குளம் சீரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்
அப்போது கலெக்டர் வளர்மதி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் கூறினார்.
அங்கன்வாடி மையம்
தொடர்ந்து நந்திவேடுதாங்கல் ஊராட்சியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற செயலாளர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கான சமையல் கூடம் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
பாராஞ்சி மற்றும் செம்பேடு ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்து குழந்தைகளிடம் உரையாடி அறிவுத்திறனை பரிசோதித்தார். பின்னர், அங்கன்வாடி மையத்தில் தாய்மார்கள், குழந்தைகளுக்கு அங்கன்வாடி மைய பணியாளர்கள் கொண்டு எடை, உயரம் அளவீடு செய்வதையும் ஆய்வு செய்தார்.
இச்சிப்புத்தூர் ஊராட்சி அமீர்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.30.20 லட்சம் மதிப்பீட்டில் 2 பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதையும், புதிய சமையல் கூடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து இச்சிபுத்தூர் சாவடிக்குளம் ரூ.7.45 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு வருவதையும், கீழ்குப்பம் ஊராட்சியில் அம்மாவார்தாங்கல் கிராமத்தில் ரூ.30.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு பள்ளி வகுப்பறை கட்டிடப் பணிகளையும் மற்றும் காவனூர் ஊராட்சி நரசிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.30.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிடப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அலுவலக பதிவேடுகள்
இதனைத் தொடர்ந்து அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக பதிவேடுகள், கணக்குகள் ஆகியவற்றையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது திட்ட இயக்குனர் லோகநாயகி, அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, தாசில்தார் சண்முகசுந்தரம், அரக்கோணம் ஒன்றிய குழுத் தலைவர் நிர்மலா சவுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், ரமேஷ் சவுந்தரராஜன், என்ஜினீயர் துரைபாபு, மாவட்ட அலுவலக மேலாளர் தபாபு, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊர வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.