திருவள்ளூர் மாவட்ட குடியரசு தின விழாவில் கலெக்டர் தேசிய கொடியேற்றி மரியாதை
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
74-வது குடியரசு தினவிழா
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று 74-வது குடியரசு தினவிழாவையொட்டி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விழாவிற்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து கலெக்டர் மூவர்ண பலூன்கள் மற்றும் சமாதான புறாக்களை பறக்க விட்டார். சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் மொழி போராட்டத் தியாகிகள் ஆகியோர்களை கௌரவிக்கும் விதமாக அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய 23 போலீசாருக்கு தமிழ்நாடு முதல்வர் காவலர் பதக்கங்களையும் வழங்கினார்.
நலத்திட்டங்கள்
பின்னர் அவர் முன்னாள் படை வீரர் நல அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட தொழில் மையம், வேளாண்மை உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மீன்வளத்துறை, கூட்டுறவு துறை, தாட்கோ என பல்வேறு துறைகள் சார்பாக 17 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் அரசு நலத்திட்டங்கள் மற்றும் கடனுதவிகளை வழங்கினார். பின்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 362 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.
மாணவர்கள் கலை நிகழ்ச்சி
விழாவின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாகசங்கள் நடைபெற்றது. இதனை பொதுமக்கள் கண்டு களித்தனர். இதில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரிஷப், திருவள்ளூர் சப்-கலெக்டர் மகாபாரதி, பயிற்சி உதவி கலெக்டர் கேத்ரின் சரண்யா, உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா, திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் அரசி ஸ்ரீ வத்சன், சுகாதார துறை துணை இயக்குனர் ஜவர்கலால், திருவள்ளூர் தாசில்தார் மதியழகன் மற்றும் அனைத்து துறை அரசு உயர் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.