விரிவாக்கப்பணி தொடர்பாக கலெக்டர் நேரில் ஆய்வு


விரிவாக்கப்பணி தொடர்பாக கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 20 Sept 2023 12:15 AM IST (Updated: 20 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் விரிவாக்கப்பணி மேற்கொள்வது தொடர்பாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் விரிவாக்கப்பணி மேற்கொள்வது தொடர்பாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஒருங்கிணைந்த பஸ் நிலையம்

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் ஏற்படும் வாகன நெரிசல் மற்றும் மக்கள் பெருக்கத்தின் காரணமாக சாலைகளில் பஸ்கள் குறித்த நேரத்திற்கு செல்லவும், பயணிகள் தாங்கள் பயணம் செய்யும் இடத்திற்கான பஸ்களை எளிதாக கண்டறியும் வகையிலும் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையத்தை ரூ.55 கோடியில் விரிவாக்கம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாகர்கோவிலில் இருந்து புறப்படும் புறநகர் பஸ்கள், உள்ளூர் பஸ்கள் ஆகியவற்றினை வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று பயணிக்க நேரிடுகிறது. பயணிகளின் வசதிக்காக உள்ளூர் மற்றும் புறநகர் பஸ்கள் அனைத்தும் ஒரு பஸ் முனையத்திலிருந்து புறப்படும் வகையில் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையத்தினை விரிவாக்கம் செய்வதற்காக அருகாமையில் உள்ள பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தார். அப்போது கலெக்டர் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமையப்பெற்றால் அதனால் பாதிப்புகள் ஏதும் ஏற்படுமா? என்ற தொலைநோக்கு பார்வையில் தொழில்நுட்பம், பொருளாதாரம், வாகன நெரிசல், நகர வளர்ச்சி, நிதி நிலை உள்ளிட்டவை குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

அறிவுறுத்தல்

அதனைத்தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் மூலதன மானிய நிதி ரூ.14.41 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தெங்கம்புதூர் ஆயக்கட்டு வரை 630 மி.மீ. விட்டமுள்ள குழாய் 5.450 கி.மீ. நீளத்திற்கு பதிக்கும் பணி நடைபெற்று வருவதையும், 4.15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சேகரிப்பு தரைமட்ட தொட்டியையும் கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டார்.

அப்போது நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் இந்த குழாயை கால்வாயின் வலதுபுறமாக மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் கலெக்டர் நேற்று கள ஆய்வு மேற்கொண்டு ஏற்கனவே பணிகள் நடைபெற்றுவரும் முறையிலேயே பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள துறை சார்ந்த அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது நாகர்கோவில் மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியம், வேளாண் விற்பனை துணை இயக்குனர் சுந்தர் டேனியல் பாலஸ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் திருநாவுக்கரசு, உதவி நிர்வாக பொறியாளர் பிரேம்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story