புலம்பெயர்ந்த தமிழர்கள் மானிய உதவியுடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் மதுசூதன்ரெட்டி தகவல்
கொரோனா பெருந்தொற்று பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தமிழகம் திரும்பிய புலம் பெயர்ந்த தமிழர்கள் மானிய உதவியுடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தமிழகம் திரும்பிய புலம் பெயர்ந்த தமிழர்கள் மானிய உதவியுடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
கடனுதவி
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கொரோனா பெருந்தொற்று பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தமிழகம் திரும்பிய புலம் பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்குடன் தமிழ்நாடு அரசு "புலம் பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம்" என்னும் திட்டத்தினை மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா தொற்று பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெற்றுப் பயன் பெறலாம். விண்ணப்பிப்பவர்கள் 1.1.2020 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் தமிழ்நாடு திரும்பியிருக்க வேண்டும். குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18-க்கு மேலாகவும், 55-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இணையதள முகவரி
விற்பனை மற்றும் சேவைத் தொழில் திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சமாகவும், உற்பத்தித் தொழில் திட்டங்களுக்கு ரூ.15 லட்சமாகவும், பயனாளர் பங்காக பொதுப்பிரிவுவினர் திட்டத் தொகையில் 10 சதவீதமும் மற்றும் பெண்கள், இட ஒதுக்கீடு பிரிவினர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் 5 சதவீதமும் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கி கடனாக வழங்கப்படும். அரசு, திட்டத் தொகையில் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.2 லட்சம் என வழங்கும் மானியம் 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடனுக்கு சரிகட்டப்படும்.
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் www/msme.Online.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை இரண்டு பிரதிகள் மற்றும் உரிய ஆவணங்களுடன் மாவட்ட தொழில் மையம், சிவகங்கை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பயன் பெறலாம்
எனவே, வெளிநாடுகளில் இருந்து கொரோனா பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியும் ஆர்வமும் கொண்டோர் விண்ணப்பித்து பயன்பெறலாம். இது குறித்து, மேலான விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற சிவகங்கை கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தினுள் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தினை நேரடியாக அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.