கரும்பு கொள்முதல் தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் கலெக்டர் தகவல்


கரும்பு கொள்முதல் தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் கலெக்டர் தகவல்
x

பொங்கல் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. கரும்பு கொள்முதல் தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும், இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் எனவும் கலெக்டர் அறிவுரை வழங்கி உள்ளார்

திருச்சி

பொங்கல் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. கரும்பு கொள்முதல் தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும், இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் எனவும் கலெக்டர் அறிவுரை வழங்கி உள்ளார்.

பொங்கல் தொகுப்பு

திருச்சி மாவட்டத்தில் 8 லட்சத்து 33 ஆயிரத்து 612 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இதற்காக, வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழு அமைக்கப்பட்டு கரும்பை கொள்முதல் செய்வதற்கான பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.

வட்டார அளவில் கரும்பு கொள்முதல் குழு நியமிக்கப்பட்டுள்ளதால் அந்தந்த வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. அதன்படி, திருவானைக்காவல் அடுத்த திருவளர்ச்சோலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது, கரும்பின் உயரம், தரம் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார். ஆனால் இன்னும் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. ஓரிரு நாளில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கரும்பு கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா மற்றும் வேளாண்மை, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உடன் சென்று கரும்பு வயல்களை பார்வையிட்டனர்.

இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்

மேலும் கரும்பு கொள்முதல் தொடர்பான விவரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு, கொள்முதல் தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். எனவே கரும்பு கொள்முதல் தொடர்பாக இடைத்தரகர்களையோ, இதர நபர்களையோ நம்ப வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் விவசாயிகள் தங்களிடம் கொள்முதல் செய்யவரும் அலுவலர்கள் குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் எந்த கூட்டுறவு சங்கத்துக்கு தங்களிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது போன்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

200 ஏக்கரில் கரும்பு சாகுபடி

திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 200 ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களுக்கு வினியோகம் செய்யும் அளவுக்கு திருச்சி மாவட்டத்தில் கரும்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story