காலை உணவுத்திட்டத்தில் 7,197 பள்ளி மாணவ-மாணவிகள் கலெக்டர் தகவல்


காலை உணவுத்திட்டத்தில் 7,197 பள்ளி மாணவ-மாணவிகள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Oct 2023 8:45 PM GMT (Updated: 6 Oct 2023 8:45 PM GMT)

மதுரை மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தின் கீழ் 73 பள்ளிகளில் பயிலும், 7 ஆயிரத்து 197 மாணவ-மாணவிகள் தினமும் சாப்பிடுகின்றனர் என்று கலெக்டர் தெரிவித்துள்ளர்.

மதுரை

மாணவர்கள் வருகை

தமிழக அரசின் சாதனை திட்டங்களை, மதுரை மாவட்ட மக்கள் தொடர்பு துறை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது. இது தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, மக்கள் தொடர்பு அலுவலர் சாலிதளபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கலைசெல்வம் ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாட்டிலேயே முன்னோடி திட்டமான முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் மொத்தம் 1,545 பள்ளிகளில் 1,14,095 மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயன் பெறுகிறார்கள். மாணவ-மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரூ.1500 மதிப்பூதியம்

காலை உணவுத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி 26 தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 2,686 மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். மேலும் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் 2-ம் கட்டம் மற்றும் 3-ம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டு மொத்தம் 73 பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 7 ஆயிரத்து 197 மாணவ-மாணவிகள் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

மதுரை மாநகராட்சியின் பள்ளிகளில் மட்டும் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகளுக்கு உணவுகள் வழங்கும் பணியில் 126 தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் மாதந்தோறும் ரூ.1500 மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story