அனைத்து கறவை மாடுகளுக்கும் தடுப்பூசி- கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் தகவல்


அனைத்து கறவை மாடுகளுக்கும் தடுப்பூசி- கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் தகவல்
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கறவை மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தவும் காப்பீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்உற்பத்தியாளர் குறைதீர்வு முத்தரப்பு கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கறவை மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தவும் காப்பீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்உற்பத்தியாளர் குறைதீர்வு முத்தரப்பு கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.

கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கான குறை தீர்வு முத்தரப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பால் உற்பத்தியாளர் சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் பேசுகையில், ''பால் உற்பத்தியாளர் சங்கங்களில் எடை மேடை பொருத்த வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு காப்பீடு, கறவை மாடுகளுக்கு கடன், குறைந்த விலையில் சினை ஊசி போட வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் பால் பாக்கெட் தயார் செய்யும் பண்ணை அமைக்க வேண்டும்'' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதனை தொடர்ந்து கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:-

அனைத்து விவசாயிகளும் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் வங்கிகளில் கடன் பெற்று புதிய கறவை மாடுகள் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து கறவை மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தவும் காப்பீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். நோயுற்ற கால்நடைகளுக்கு உடனடி சிகிச்சை பெற கால்நடை மருத்துவ வசதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மின்னணு எடைமேடை

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். மின்னணு எடை மேடை, பால் பரிசோதனை கருவி பொருத்தி தரமான பாலுக்கு ஏற்றவாறு பணம் வினியோகம் செய்ய ஒரு வாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இனிவரும் காலங்களில் மாதத்திற்கு ஒரு முறை அல்லது 45 நாட்களுக்கு ஒரு முறை முத்தரப்பு கூட்டம் நடத்தப்படும். தற்போது கொள்முதல் செய்யப்படும் 2 லட்சத்து 54 ஆயிரம் லிட்டர் பாலுடன் 75 லிட்டர் கூடுதலாக உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கோரிக்கைகள் மீது விரிவான நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் தீர்வு காணப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம், வேளாண்மை துறை இணை இயக்குனர் அரக் குமார், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமாபதி, ஆவின் பொது மேலாளர் ரங்கசாமி, துணை பதிவாளர் (பால்வளம்) கோபி, ஒன்றிய கால்நடை மருத்துவர்கள், ஒன்றிய களப்பணியாளர்கள் மற்றும் பால்வளத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story