வளர்ச்சி பணிகளை கலெக்டர் உமா நேரில் ஆய்வு


வளர்ச்சி பணிகளை கலெக்டர் உமா நேரில் ஆய்வு
x

முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா நேரில் ஆய்வு செய்தார்.

நாமக்கல்

ராசிபுரம்

வளர்ச்சி பணிகள்

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்ற கலெக்டர் உமா, குழந்தைகளுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவுகள், குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் ஆரம்ப கல்வி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்தார். மேலும் குழந்தைகளின் உயரம், எடை ஆகியவற்றை போஷன் அபியான் செயலியில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

கலெக்டர் ஆய்வு

அதேபோல் முத்துக்காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள மதிய உணவு கூடத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை விரிவாக கலெக்டர் கேட்டு அறிந்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு உணவுகளை சுகாதாரமாகவும் தரமானதாகவும் வழங்கிட வேண்டுமென பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அரசு காலனியில் அங்கன்வாடி மேற்கு பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் செங்குத்து உறிஞ்சி குழாய் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து முத்துக்காளிப்பட்டியில் இணைய வழி பட்டா வழங்குவதற்காக வரண் முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story