அரசு பள்ளிகளில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு
கண்டமனூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கண்டமனூரில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் திடீரென்று வந்தார். அப்போது அவர் ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் எடை அளவிடும் கருவி, விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். பின்னர் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் மற்றும் தரம் குறித்து கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து கண்டமனூர், புதுராமச்சந்திரபுரம், வேலாயுதபுரம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ-மாணவிகளின் வருகை பதிவேடு, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக கேட்டறிந்தார். மேலும் வகுப்பறைகளுக்கு சென்று மாணவ-மாணவிகளின் வாசிப்பு மற்றும் எழுத்து திறன் குறித்து ஆய்வு செய்தார்.
அதன்பிறகு கண்டமனூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, ஒன்றிய ஆணையாளர்கள் திருப்பதி முத்து, திருப்பதி வாசகன், எட்டப்பராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராசாத்தி பால்சாமி, கண்டமனூர் ஊராட்சி மன்ற தலைவர் கவுரி பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.