விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு


விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
x

விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டாா்.

விழுப்புரம்


விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து நேற்று காலை மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விழுப்புரம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விழுப்புரம், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லூர், வானூர் ஆகிய வட்டங்களுக்குட்பட்ட 17 உள்வட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்திடும் வகையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வருகை குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக ஆணை, பகிர்மானப்பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகள் பார்வையிட்டார்.

மேலும் பொதுமக்கள் வழங்கிய மனுக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மற்றும் நிலுவையில் உள்ள மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் அலுவலர்கள், பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கான திட்டங்களை உரிய காலத்தில் வழங்கிடும் வகையில் செயல்பட வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து பெறக்கூடிய மனுக்களுக்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் அலுவலக பதிவேடுகளை பராமரிப்பதிலும் முழு கவனத்துடன் செயல்பட்டு அரசு வழிகாட்டுதல்படி செயல்பட வேண்டும் என கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரகுகுமார், உதவி ஆணையர் (கலால்) சிவா உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story