முதல்-அமைச்சரின் உதவி மைய மனுக்கள் கண்காணிப்பு பிரிவில் கலெக்டர் ஆய்வு


முதல்-அமைச்சரின் உதவி மைய மனுக்கள் கண்காணிப்பு பிரிவில் கலெக்டர் ஆய்வு
x

தேனியில் உள்ள முதல்-அமைச்சரின் உதவி மைய மனுக்கள் கண்காணிப்பு பிரிவில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

தேனி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர், முதல்-அமைச்சரின் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறையின் கீழ் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான முதல்-அமைச்சரின் உதவி மைய மனுக்கள் தர கண்காணிப்பு பிரிவு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இ-சேவை மையங்கள் மூலமாகவும், zoho portal என்ற இணையதளம் வாயிலாகவும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது. அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து குறைதீர்க்கப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது தொடர்பாக இந்த கண்காணிப்பு பிரிவில் இருந்து அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் இன்று திடீர் ஆய்வு செய்தார்.மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை பார்வையிட்டார். பின்னர் அந்த நடவடிக்கை தொடர்பான உண்மைத்தன்மை அறியும் வகையில், மனுதாரர்களின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு மனுக்கள் மீது முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளதா? என விசாரணை நடத்தினார். மேலும் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் தொடர்பு கொண்டு நிராகரிப்புக்கான காரணங்கள் குறித்து விசாரித்தார். பின்னர், நிராகரிக்கப்பட்ட மனுக்களை மீண்டும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (குற்றவியல்) ஜஸ்டின் சாந்தப்பா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story