ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு


எருமப்பட்டி அருகே ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நாமக்கல்

எருமப்பட்டி

ஆய்வு

எருமப்பட்டி அருகே உள்ள ரெட்டிபட்டி ஊராட்சி கூலிப்பட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி கற்கும் வகையிலான விளையாட்டுப் பொருட்கள் தேவையான அளவு இருப்பதையும், குழந்தைகள் அந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி விளையாடுவதையும் பார்வையிட்டார். தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுடன் கலந்து உரையாடினார்.

சுவற்றில் வரையப்பட்டுள்ள பறவைகள், விலங்குகளின் பெயர்கள் குறித்து குழந்தைகளை தெரிவிக்க சொல்லி சரியாக கூறிய குழந்தைகளுக்கு பாராட்டுகளையும், அந்த பறவைகள் விலங்குகளின் பெயரை குழந்தைகளிடம் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்தார்.

மாணவர்களின் கற்றல் திறன்

இதையடுத்து அங்கன்வாடி மைய வளாகத்தில் உள்ள ஊட்டச்சத்து தோட்டத்தில் வல்லாரைக்கீரை உள்ளிட்ட பல்வேறு கீரை மற்றும் காய்கறி செடிகள் பராமரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு செடிகள் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார் அதனை தொடர்ந்து கூலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆய்வு மேற்கொண்ட அவர் பள்ளி மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து புத்தகங்களை வாசிக்க செய்து பரிசோதித்தார். சரியாக உச்சரிக்கவும் குழந்தைகளுக்கு கலெக்டர் கற்றுக் கொடுத்தார்.

கற்றல் திறன் நன்கு இருப்பதை உறுதி செய்த கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். பின்னர் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், பென்சில் ஆகியவற்றை பரிசாக வழங்கினார். மேலும் நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்கும் பணியையும் பார்வையிட்டார். அப்போது மாணவ, மாணவிகளுக்கு வழங்க தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவினை சாப்பிட்டு ருசி பார்த்தார்.

இந்நிகழ்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அங்கன்வாடி பயணியாளர்கள் உள்பட அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story