கொல்லிமலையில்வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
கொல்லிமலையில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொல்லிமலையில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நத்துக்குழிபட்டி, குண்டூர் நாடு, செம்மேடு, பூங்குளம்பட்டி, பெருமாப்பட்டி ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன் தொடக்கமாக நத்துக்குழிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் மதிப்பில் 210 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பதிவேடுகளை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி பாடப்புத்தகங்களை வாசிக்க சொல்லி கற்றல் திறனை ஆய்வு செய்தார்.
பின்னர் நத்துக்குழிபட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் நாற்றங்கால் அமைத்துள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நத்துக்குழிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி சமையல் கூடத்தை பார்வையிட்டு மாணவர்களுக்கு தயார் செய்துள்ள மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.
சமையல் கூடம்
பின்னர் பூங்குளம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.2.60 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளதையும், ரூ.5 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் மதிய உணவு சமையல் கூடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொல்லிமலை செம்மேட்டில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் உணவகத்துடன் கூடிய தேநீரகம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நடைபெற்று வரும் பணிகளை குறிப்பிட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கான்கிரீட் சாலை
தொடர்ந்து கொல்லிமலை பெருமாபட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.4½ லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கபட்டு உள்ளதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால், சரவணன், அரசுத்துறை அலுவலர்கள் உடன் உள்ளனர்.