சிங்கம்புணரி, திருப்பத்தூர் தாலுகா அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு
சிங்கம்புணரி, திருப்பத்தூர் தாலுகா அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகங்களில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டு அங்கு நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கலெக்டர் ஆய்வு
சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூரில் உள்ள தாலுகா அலுவலகங்களில் நடைபெறும் செயல்பாடுகள், பல்வேறு நிலைகளில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் சில மாவட்டங்களை ஒருங்கிணைத்து மண்டல ரீதியாக ஆய்வுக் கூட்டமும், சம்பந்தப்பட்ட துறைகள் ரீதியாக துறைந்த சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி அரசின் திட்ட செயல்பாடுகள் மற்றும் மாவட்டம் முழுவதும் சம்பந்தப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும் அதன் நிலைகள் குறித்தும் அரசின் அறிக்கைகள் சமர்பிக்க ஏதுவாக அனைத்து கோட்டாட்சியர் அலுவலர்கள், தாசில்தார்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியவைகளில் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சிங்கம்புணரி தாலுகா அலுவலகம் மற்றும் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வருகை பதிவேடுகள்
இந்த ஆய்வின் போது இ-சேவை மையம், நில அளவை பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு, சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு, தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவையில் உள்ள பதிவேடுகளின் நிலை, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், அலுவலக பணியாளர்களின் வருகை பதிவேடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார். கலெக்டர் ஆய்வின் போது உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் நஜிமுன்னிசா, தாசில்தார்கள் சாந்தி (சிங்கம்புணரி), வெங்கடேசன் (திருப்பத்தூர்) மற்றும் தனி தாசில்தார்கள் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஆனந்தன் (சிங்கம்புணரி), கண்ணதாசன் (திருப்பத்தூர்) உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.