வள்ளல் அதியமான் கோட்டத்தில்புனரமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு
அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டம் புனரமைக்கும் பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதியமான் கோட்டம்
நல்லம்பள்ளி தாலுகா அதியமான்கோட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வள்ளல் அதியமான் கோட்டம் அமைந்துள்ளது. இந்த அதியமான் கோட்டத்தை சீரமைத்து, புனரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் அதியமான் கோட்டம் வளாகத்தில் புதிய நூலகம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு உத்தரவுப்படி பொதுபணித்துறையின் சார்பில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது. மேலும் வள்ளல் அதியமான் கோட்டத்தை அழகுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் வள்ளல் அதியமான் கோட்டத்தில் நடைபெறும் திட்டப் பணிகளை கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு செய்தார். புனரமைப்பு திட்டத்தின் கீழ் எந்தெந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நூலகம் கட்டுமான பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த திட்டப்பணிகள் அனைத்தும் குறித்த காலத்துக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சண்முகம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், ஊரக வளர்ச்சி முகமை உதவி பொறியாளர் சுகுணா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.