அரியலூர் தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு


அரியலூர் தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
x

அரியலூர் தற்காலிக பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர்

புதிய பஸ் நிலையம்

அரியலூர் நகராட்சியின் பஸ் நிலைய கட்டிடம் மிகவும் சிதிலமடைந்ததால் அதனை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய பஸ் நிலையம் கட்டும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அரியலூர் புறவழிச்சாலையில் தற்போது தற்காலிக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு குடிநீர், பொதுமக்கள் அமருவதற்கான நிழற்குடை மற்றும் இருக்கைகள், கழிவறை வசதிகள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்பட்டுள்ளதா? என்பது குறித்து மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், பஸ்கள் உரிய நேரத்தில், போதிய எண்ணிக்கைகளில் இயக்கப்படுவது குறித்தும், டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் அவர்களிடம் கேட்டு அறிந்தார். பின்னர் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்தி தருமாறு நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மாவட்ட நூலகம்

அதனைத்தொடர்ந்து, அரியலூர் நகராட்சியில் உள்ள மாவட்ட நூலகமானது போதிய இடவசதியின்றி இயங்கி வருவதால் கூடுதலாக புதிய நூலக கட்டிடம் அமைக்க அரியலூர் நகராட்சியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையின் இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், வருவாய்த்துறையின் மூலம் உரிய கோப்புகள் தயார் செய்திடவும், வேறு இடங்கள் ஏதும் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை பார்வையிட்டு கல்லூரி நுழைவு வாயிலில் உள்ள மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளுக்கு கட்டப்பட்டுள்ள தற்காலிக கட்டிடங்களை விரைவாக அகற்றிடவும், கல்லூரிகளில் உள்ள முட்புதர்களை சுத்தம் செய்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

ரேஷன் கடைகள்

தொடர்ந்து, அரியலூர் நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடைகளை பார்வையிட்டு பொருட்களின் இருப்பு விவரம், பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டதற்கான பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். பின்னர், பொதுமக்களிடம் ரேஷன் கடைகள் அனைத்து நேரங்களிலும் திறக்கப்பட்டுள்ளது குறித்தும், வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும், அனைத்து பொருட்களும் உரிய அளவில் முறையாக வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார். மேலும், பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திடவும், பொருட்களை பொதுமக்களுக்கு காலம் தாழ்த்தாமல் வழங்கிடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

பின்னர், அரியலூர் நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கூட்டுறவு மருந்தகத்தினை பார்வையிட்டு விற்பனை செய்யப்படும் மருந்து, மாத்திரைகளின் தரம் குறித்து சம்பந்தப்பட்ட பணியாளரிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில், ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் உத்தண்டி, அரியலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தமயந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


Next Story