விவசாய நிலங்களில் கலெக்டர் ஆய்வு
விவசாய நிலங்களில் கலெக்டர் ஆய்வு
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை வட்டாரத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு தமிழக அரசின் மானியத்தில் சொட்டுநீர் பாசன வசதி செய்து தரப்படுகிறது. மேலும் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கும், மின்மோட்டர் பொருத்துவதற்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிப்புத்தூர் பகுதியில் மானியத்தில் சொட்டுநீர் பாசன தொட்டி, மோட்டார் பொருத்தப்பட்ட விவசாய நிலங்களில் கலெக்டர் கிராந்தி குமார் ஆய்வு செய்தார். மேலும் சொட்டுநீர் பாசனம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் விளக்கினார். ஆய்வின்போது தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி, கலெக்டரின் வேளாண் நேர்முக உதவியாளர் முகமது சபி, வேளாண் துணை இயக்குனர்(வேளாண் வணிகம்) பெருமாள் சாமி, வட்டார வேளாண் உதவி இயக்குனர் ரமேஷ், உதவி அலுவலர் தியாகு ஆகியோர் உடனிருந்தனர்.