மகளிர் உரிமை திட்டத்திற்கான முகாம்களில் கலெக்டர் ஆய்வு


மகளிர் உரிமை திட்டத்திற்கான முகாம்களில் கலெக்டர் ஆய்வு
x

திருவள்ளூரில் நடைபெறும் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்டங்களிலும் பெறப்பட்டு வருகிறது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் அதற்கான முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெறும் விண்ணப்ப பதிவு முகாம்களை நேற்று மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது அவர் கூறுகையில், 'திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை முதற்கட்டமாக கடந்த 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் 4-ந் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 629 நியாய விலை கடைகளில் முதல் கட்டமாக 4 லட்சத்து 221 குடும்ப அட்டைதாரர்கள் தான் விண்ணப்பங்கள் கொடுப்பதற்கு தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

அந்த வகையில் 1125 தன்னார்வலர்களை நியமித்து அதன் மூலம் 629 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது' என கூறினார்.

ஆய்வின்போது திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதைபோல பொன்னேரி தாலுகாவில் அடங்கிய சோழவரம், பொன்னேரி, கீழ்மேனி, குடிநெல்வாயல், வாயலூர், புதுச்சேரிமேடு, மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் இடங்களில் சப்-கலெக்டர் ஐஸ்வர்யாராமநாதன், தாசில்தார் செல்வகுமார் உள்பட அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விண்ணப்பிக்க வந்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.


Next Story