கடலோர பகுதிகளில் கலெக்டர் ஆய்வு


கடலோர பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Dec 2022 6:45 PM GMT (Updated: 9 Dec 2022 6:45 PM GMT)

மாண்டஸ்புயல் எதிரொலியாக பரங்கிப்பேட்டை,சிதம்பரம் கடலோர பகுதிகளில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

கடலூர்

சிதம்பரம்,

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில், கடலூர் மாவட்டத்திலும், குறிப்பாக கடலோர பகுதிகளிலும், தேவையான நடவடிககைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் பரங்கிப்பேட்டை, சிதம்பரம் பகுதியில் கடலோர பகுதியை பார்வையிட்டார். அதன்படி, கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட முடசல் ஓடை மீனவ கிராமத்தில் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்டார்.

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

அப்போது அங்கிருந்த மீனவர்களிடம், புயல் கரையை கடக்கும் வரை யாரும் வெளியே நடமாட வேண்டாம், படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறு கூறினார். குறிப்பாக தாழ்வான பகுதியில் உள்ள மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்போது சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதாசுமன், பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகை முத்துக்குமார், துணை தலைவர் கிள்ளை ரவீந்திரன், செயல் அலுவலர் செல்வி, தலைமை எழுத்தர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கம், சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் பாண்டியன், கலைமணி, நிர்வாகிகள் காமராஜ், நேதாஜி உள்பட பலர் உடன் இருந்தனர்.

அண்ணாமலைநகர்

இதை தொடர்ந்து, அண்ணாமலை நகருக்கு வந்த அவர், அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலம் அரங்கில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை, கலெக்டர் பாலசுப்பரமணியம் நேரில் சந்தித்து பேசினார். மேலும், அங்கிருந்த மீட்பு உபகரணங்களையும் அவர் பார்வையிட்டார்.

அப்போது அவருடன் சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன், தாசில்தார் ஹரிதாஸ், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்றத் தலைவர் க.பழனி, அண்ணாமலை பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜ்பிரவீன் உள்பட பலர் உடனிருந்தனர்.

ஆலோசனை கூட்டம்

இதை தொடர்ந்து, சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி, சிதம்பரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு, பாதுகாப்பு குறித்து கேட்டறிந்து, மேற்கொண்டு எடுக்க வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

கூட்டத்துக்கு சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன் முன்னிலை வகித்தார். இதில், சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் அஜிதாபர்வின், தாசில்தார்கள் ஹரிதாஸ், ரம்யா, வேணி, சேகர், பொதுப்பணி துறை செயற்பொறியாளர் காந்தரூபன், பேரூராட்சி தலைவர் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்ராகிம், தங்கம், பாலகிருஷ்ணன், மின் துறை செயற்பொறியாளர் ஜெயந்தி, உதவி பொறியாளர் கார்த்தி, சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் வேளாண், கால்நடை பராமரிப்பு, தீயணைப்பு உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story