தாரமங்கலம், எடப்பாடி பகுதிகளில் கலெக்டர் ஆய்வு


தாரமங்கலம், எடப்பாடி பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
x

தாரமங்கலம், எடப்பாடி பகுதிகளில் கலெக்டர் கார்மேகம் நேற்று ஆய்வு செய்தார்.

சேலம்

தாரமங்கலம், எடப்பாடி பகுதிகளில் கலெக்டர் கார்மேகம் நேற்று ஆய்வு செய்தார்.

மாற்று இடம்

தாரமங்கலம் நகராட்சி 1-வது வார்டு கசுவரெட்டிபட்டி ஏரி பகுதியில் நரிக்குறவர்கள் இனத்தை சேர்ந்த 54 குடும்பங்கள் வசித்து வந்தன. இவர்களது குடியிருப்பு பகுதிக்கு ஏரியின் உபரிநீர் புகுந்ததால், அவர்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டது.

இதன்படி ஆரூர்பட்டி ஊராட்சி வெள்ளக்கல்பட்டி பகுதியில் அவர்களை நிரந்தரமாக குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 1.5 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டது. மேலும் ஒரு குடும்பத்திற்கு 2 சென்ட் நிலம் வீதம் 44 குடும்பங்களுக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சாலை

மேலும் நரிக்குறவர்களின் குழந்தைகள் பயில அங்கன்வாடி மையம், குடியிருப்பு பகுதியில் 25 அடி அகல கான்கிரீட் சாலை, குடிநீர் தொட்டி அமைக்கவும் கலெக்டர் கார்மேகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது ஓமலூர் தாசில்தார் வல்லமுனியப்பன், வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, தாரமங்கலம் ஒன்றிய ஆணையாளர்கள் கருணாநிதி, அனுராதா, ஆரூர்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் காங்கேயன், நரிக்குறவர்கள் குடும்பத்தலைவர் பார்த்திபன் உள்பட பலர் உடனிருந்தனர்.

எடப்பாடி

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எடப்பாடியை அடுத்த வெள்ளாளபுரம், சமுத்திரம், தாராபுரம் மற்றும் எடப்பாடி பெரிய ஏரி பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை நேரில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். மேலும் அந்த பகுதியில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பாதிப்பிற்குள்ளான பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ஆய்வின் போது சங்ககிரி உதவி கலெக்டர் சவுமியா, எடப்பாடி தாசில்தார் லெனின், வெள்ளாளபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story