கட்டிட பணிகளை கலெக்டர் ஆய்வு
வாலாஜா ஒன்றியத்தில் நடைபெற்று வரும் கட்டிட பணிகளை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெறும் கட்டிடப் பணிகளை கலெக்டர் வளர்மதி திடீர் ஆய்வு செய்தார். அப்போது முகுந்தராயபுரம் ஊராட்சியில் 2 வகுப்பறை கொண்ட பள்ளிக் கட்டிடம், புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டுவதை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து, லாலாபேட்டை ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் பணிகளையும், மருதம்பாக்கம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணிகளையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பள்ளேரி, கொண்டகுப்பம் ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற செயலக புதியக் கட்டிடம் கட்டும் பணிகள், நிலுவையில் உள்ள பணிகளையும் பார்வையிட்டு, பணிகள் தொடங்காமல் இருப்பதற்கான காரணங்களை கேட்டறிந்து மே மாதம் 10-ந் தேதிக்குள் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதை கண்காணிக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
10 நாட்களுக்குள் முடிக்க உத்தரவு
கல்புதூர் ஊராட்சியில் 2 வகுப்பறை கொண்ட பள்ளிக் கட்டிடம், புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டுவதையும் பார்வையிட்டு 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். கல்மேல்குப்பம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் 2 வகுப்பறை கொண்ட பள்ளிக் கட்டிட பணிகளை 2 வாரத்திற்குள் முடிக்க கேட்டுக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து வாணாபாடி, செட்டித்தாங்கல் ஊராட்சிகளில் நடைபெறும் 2 வகுப்பறை பள்ளிக் கட்டிடங்கள், அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும், வன்னிவேடு ஊராட்சியில் 6 வகுப்பறை கொண்ட பள்ளிக் கட்டிடம் கட்டும் பணியையும் பார்வையிட்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்திடுமாறு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஒன்றியப் பொறியாளர் முனுசாமி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் உடனிருந்தனர்.