கோவை ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு
கோவையில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வினியோகம் செய்வது கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார்.
கோவை
கோவையில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வினியோகம் செய்வது கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு நேற்று முன்தினம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை லிங்கசெட்டிவீதி, தெப்பக்குளம் வீதியில் உள்ள ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி கூட்டுறவு பண்டகம், அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி கடை ஆகிய ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கும் பணியை கலெக்டர் சமீரன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கிருந்த பொதுமக்களிடம் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் சரியாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். தொடர்ந்து கலெக்டர் சமீரன் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 99 ஆயிரத்து 163 அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் 1,089 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் என மொத்தம் 11 லட்சத்து 252 குடும்பங்களுக்கு ரூ.118 கோடியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. நகர் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 350 பேருக்கும், கிராமப்புற பகுதிகளில் 250 பேருக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட்டு வருகிறது.டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் பொதுமக்கள் தங்களுக்கான பொங்கல் பரிசுத்தொகை வாங்கி செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சத்துணவு மையம்
அதனைத்தொடர்ந்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தேவாங்க மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையம் மற்றும் அந்த வளாகத்தில் செயல்பட்டுவரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவற்றை கலெக்டர் சமீரன்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம், முட்டை முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து, கேட்டறிந்தார்.
மேலும், மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் சுவை மற்றும் தரம் குறித்து கேட்டறிந்துடன், அந்த உணவு நன்றாக சமைக்கப்பட்டுள்ளதா என சாப்பிட்டு பரிசோதித்தார்.