வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 26 July 2023 12:57 AM IST (Updated: 26 July 2023 4:50 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

கலெக்டர் ஆய்வு

ராணிப்பேட்டையில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் தினசரி அங்காடியில் 60 காய்கறி விற்பனை கடைகளும். 300 சிறு விற்பனை காய்கறி கடைகளும், ஒரு குளிர்பதன கிடங்கு, ஆட்டுச் சந்தைக்கான கட்டிடம், ஓய்வறை, கழிவறை ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த பணிகளை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வருகிற பிப்ரவரி மாதம் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

வாலாஜா ஒன்றியம் மருதம்பாக்கம் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில், மக்கும் குப்பைகள் விவசாயத்திற்கும், பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகள் சிமெண்டு தொழிற்சாலைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனை கலெக்டர் ஆய்வு செய்தார்.

பூண்டி மகான் குளம்

ராணிப்பேட்டை பிஞ்சி பகுதியில் அம்ருத் 2.0 திட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்று வரும் குழாய்கள் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார். வாலாஜா பஸ் நிலையம் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பூண்டி மகான் குளம் ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப் பட்டுள்ளதையும் பார்வையிட்டு குளத்தை சுற்றி மரம் நடுதல், பூங்கா அமைத்தல், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு, விளையாட்டு அமைப்புகள் நிறுவுதல், கழிப்பறை, காவலர் அறை போன்ற பணிகளை விரைவாக முடித்திட உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது நகரமன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, துணை தலைவர் கமலராகவன், நகராட்சி ஆணையாளர் விநாயகம், நகராட்சி பொறியாளர் பரமுராசு, இளநிலை பொறியாளர் செல்வம், நகர மன்ற உறுப்பினர் ஏர்டெல் குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story