வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Sept 2023 12:15 AM IST (Updated: 22 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி நகராட்சி பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி நகராட்சி பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட கொள்ளிடம் முக்கூட்டு, ஈசானிய தெரு பகுதிகளில் உள்ள ஒரு சில கடைகளில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி அந்த பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடையின் உரிமையாளரை கலெக்டர் எச்சரித்தார். மேலும் நகராட்சி சார்பில் கடையின் உரிமையாளருக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து சீர்காழி நகராட்சி அலுவலகத்திற்கு வந்த மாவட்ட கலெக்டர் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து விவரங்களை கேட்டு அறிந்தார். அப்பொழுது 24 வார்டுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை தரமாக மழை காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும். தினமும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் நகர சபை தலைவர் ஆகியோரிடம் கேட்டுக்கொண்டார்.

பொதுமக்கள் கோரிக்கை

அப்பொழுது சீர்காழி நகர் பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக நகர் பகுதியில் சுற்றித்திரியும் பன்றி மற்றும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து சீர்காழி அருகே துறையூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் இடிந்து விழுந்த சமையல் கூட கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் தற்காலிக சமையல் கூட அமைத்து தர நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். அப்பொழுது நகர் மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், நகர மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், முழுமதி இமயவரம்பன், நகர ஆய்வாளர் மரகதம், மேலாளர் லதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர். முன்னதாக சீர்காழி நகராட்சி வளாகத்தில் தமிழக அரசு சார்பில் நகர சபை தலைவர்களுக்கு வழங்கப்பட்ட அரசு வாகனத்திற்கான சாவியை நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன், ஆணையர் ஹேமலதா ஆகியோரிடம் கலெக்டர் வழங்கினார்.


Related Tags :
Next Story