வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
ஜவ்வாது மலையில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஜவ்வாதுமலையில் உள்ள புங்கம்பட்டுநாடு ஊராட்சி கொல்லகொட்டாய் மலை கிராமத்தில் மண்வரப்பு அமைத்தல், கம்புகுடி கிராமத்தில் தனிநபர் திறந்துவெளி கிணறு, அங்கன்வாடி மையம், கொல்லகொட்டாய் கிராமத்தில் பசுமை வீடு, அரசுமரத்துக்கொல்லை உண்டு உறைவிடப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு, பெரும்பள்ளி கிராமத்தில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், புங்கம்பட்டு நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதூர் நாடு ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பணிகள் ரூ.82 லட்சத்து 68 ஆயிரத்தில் நடைபெறுகிறது. இந்த பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
அப்போது நிலுவையில் உள்ள அனைத்து கட்டுமான பணிகளையும் விரைந்து முடிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். புதூர் நாடு அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவ- மாணவிகளின் கற்றல் திறனை கலெக்டர் ஆய்வு செய்து, நன்றாக படிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கலைச்செல்வி, தாசில்தார் சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், மணவாளன், உதவி பொறியாளர்கள் சுதாகர், முருகேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.