வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியம் கொண்டல் ஊராட்சியில் 1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் சீரமைக்கும் பணி, இதேபோல் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில் விரைவில் தூர்வாரப்படவுள்ள கழுமலையார் பாசன வாய்க்கால் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கொண்டல் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தில் வேளாண்மை தொடர்பான பதிவேற்றம் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து வள்ளுவக்குடி, அகணி ஆகிய ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை நேரில் பார்வையிட்டு வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக் கொண்டார்.

அகணி வாய்க்கால் தூர்வாரும் பணி

தொடர்ந்து அகணி வாய்க்கால் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட உள்ள வாய்க்காலையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது நிம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி கிருபாநிதி மாவட்ட கலெக்டரிடம் ஏற்கனவே 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த பணியாளர்களை மாவட்ட நிர்வாகம் பணி செய்யக்கூடாது என உத்தர விட்டு இருந்தது.

ஆனால் இந்த உத்தரவை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மதிக்காமல் நிம்மேலி ஊராட்சியில் ஏற்கனவே பணிபுரிந்த பணிதல பொறுப்பாளர்களை பணியில் அமர்த்தி உள்ளதாகவும் இவர்களை பணி நீக்கம் செய்து புதிதாக பணிதல பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய வேண்டுமென மனு கொடுத்தார்.

உத்தரவு

இதனை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் உடனடியாக புதிய பணிதல பொறுப்பாளர்களை நியமனம் செய்து பணியில் அமர்த்த வேண்டும் என உத்தரவிட்டார்.

அப்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் இளங்கோவன், சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயன், மதியழகன், பத்மா, ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் சிவக்குமார், கலையரசன், தெய்வானை, அ.தி.மு.க. நிர்வாகி ராஜதுரை உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story