கோலியனூர், காணை ஒன்றியங்களில்வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


கோலியனூர், காணை ஒன்றியங்களில்வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோலியனூர், காணை ஒன்றியங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட நன்னாட்டில் தோட்டக்கலைத்துறை சார்பில் சொட்டுநீர் பாசனத்தின்கீழ் புடலங்காய் பயிர் செய்யப்பட்டுள்ளதை நேற்று மாவட்ட கலெக்டர் சி.பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து தோகைப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு சிகிச்சை பெற வந்தவர்களிடம் மருத்துவர்கள் வழங்கும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

அதன் பிறகு காணையில் உள்ள கால்நடை மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் சி.பழனி, அங்கு கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்து பார்வையிட்டார்.

மேலும் கருங்காலிப்பட்டு ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள நூலகத்தை பார்வையிட்ட அவர், வாசகர்களுக்கு தேவையான புத்தகங்கள், மாணவர்கள் பயன்பெறும் புத்தகங்கள் அதிக அளவில் இடம்பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து, கோலியனூர் ஒன்றியம் சோழம்பூண்டியில் புதிய ரக எள் பயிரையும், தோட்டக்கலைத்துறை சார்பில் வெள்ளரிக்காய் பயிர் செய்யப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

சோலார் பம்ப்

பின்னர் தென்னமாதேவி ஊராட்சியில் சோலார் பம்ப் அமைக்கும் திட்டத்தின்கீழ் 200 அடியில் சோலார் நிலத்தடி ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளதை கலெக்டர் சி.பழனி பார்வையிட்டார். அப்போது விவசாயிடம் நாளொன்றுக்கு சோலார் மூலம் மின்மோட்டார் இயங்கும் நேரம் குறித்து கேட்டறிந்ததோடு மின் தேவையின் அளவு, இதன் மூலம் கிடைக்கப்பெறும் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். அதோடு சோலார் பம்ப்பிற்கான பராமரிப்பு வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு வேளாண் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் கணேசன், துணை இயக்குனர் பெரியசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சண்முகம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்பழகன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், வேளாண்மை உதவி இயக்குனர் வேல், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வெங்கடேசன், உதவி பொறியாளர் ரவீந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story