காவேரிப்பாக்கம் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
காவேரிப்பாக்கம் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார்.
காவேரிப்பாக்கம் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் கட்டளை ஊராட்சியில் ரூ.12.61 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு பணிகளின் முன்னேற்றித்தனை ஆய்வு செய்தார். இந்த மையத்தில் மாற்றுத்திறனாளிக்கான சாய்தள வசதி மற்றும் குழந்தைகளுக்கான கழிப்பறை வசதிகள் நல்ல முறையில் அமைக்க வேண்டும் என்றார். இதனைத்தொடர்ந்து தொடக்கப்பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளதையும் பணிகள் தொடங்கப்படவுள்ளதையும் கேட்டறிந்தார்.
மேலும் ரூ5.17 லட்சம் மதிப்பீல் குழந்தைகளுக்கான கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார். . தொடர்ந்து ஊராட்சியில் பாரத பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்டியுள்ள பயனாளியின் வீட்டிற்கு சென்று பணம் வங்கியில் கிடைக்கப்பெற்றுள்ளதா என்பதையும் வீடு கட்டுவதை சீக்கிரம் முடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து ரூ.7.28 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள விவசாயிகளுக்கான நெற் களத்தினை பார்வையிட்டார். பின்னர் புதுத்தெருவில் ரூ.8.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிமெண்டு சாலை மற்றும் கழிவு நீர் கால்வாயினையும் ஆய்வு செய்தார்.
வாசிப்பு திறன்
மேலும் கிராம நூலக கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் தொடக்கப்பள்ளிக்கு சென்று மாணவ மாணவிகளின் தமிழ் வாசிப்பு திறனை வாசிக்க வைத்து ஆய்வு செய்தார்.
பின்னர் பன்னியூர் ஊராட்சியில் ரூ.45.43 லட்சம் மதிப்பீல் போடப்பட்டுள்ள புதிய சாலையினையும், ரூ.9.81 லட்சம் மதிப்பீல் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுற்றுசுவர் பணியினையும் பார்வையிட்டார்.
பின்னர் ரூ.7.72 லட்சம் மதிப்பீல் அமைக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான நெற் களத்தினையும், ரூ.1.73 லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ள சிமெண்டு சாலையினையும், ரூ.12.61 லட்சம் மதிப்பீல் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினையும் கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார்.
இதையடுத்து புதுப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கான கழிப்பறைகள் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் இருந்ததை பார்த்து, குழந்தைகளை கழிப்பறைகளை பயன்படுத்த கட்டப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என ஆசிரியருக்கும் ஊராட்சி மன்ற தலைவருக்கும் உத்தரவிட்டார். தொடர்ந்து பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளின் ஆங்கில வாசிப்பு திறனை சோதித்து பார்த்தார்.
பின்னர் புதூர் ஊராட்சியில் ரூ.6.86 லட்சம் மதிப்பீல் 10 ஆயிரம் மரச்செடிகள் உற்பத்தி செய்யும் கூடுதல் நாட்றங்கால் பண்ணையினை ஆய்வு செய்தார். புதூர் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை செல்லும் வழியில் திடீரென ஆய்வு செய்து அங்கு நோயாளிகளுக்கு உள்ள வசதிகள், கழிப்பறை வசதி, அமருமிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
கூடுதல் கடைகள்
இதனைத்தொடர்ந்து பாணாவரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் கிராமசந்தை கூரை அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார். அப்போது கடைகள் ஒதுக்கீடு முறையாக செய்யவும், தேவைப்பட்டால் இவற்றில் வரும் நிதியினை கொண்டு கூடுதல் கடைகள் கட்டலாம் எனவும் தெரிவித்தார். கூத்தம்பாக்கம் ஊராட்சியில் 2 ஏக்கர் பரப்பில் ரூ.6.48 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுவதை பார்வையிட்டார்.
ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜி.லோகநாயகி, ஒன்றியக்குழுத்தலைவர் அனிதாகுப்புசாமி, செயற்பொறியாளர் முத்துக்கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையூப்புதின், தண்டாயுதபாணி, உதவி செயற் பொறியாளர் தமிழ்செல்வி, ஒன்றிய பொறியாளர் ஏகநாதன், மேற்பார்வையாளர்கள் டீக்காராமன், தமிழ்செல்வி, கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணவேணி, ஒன்றியக்குழு உறுப்பினர் கணேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அலமேலு முருகன், சுந்தரம், லோகநாயகி விநாயகம், தயாவதி, அர்ஜீனன், லட்சுமி, மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.