வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 3 Nov 2022 6:45 PM GMT (Updated: 3 Nov 2022 6:45 PM GMT)

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார்.

வளர்ச்சி பணிகள்

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நீலகிரி கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார். நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குண்டாடா பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.14.76 கோடி செலவில் 164 குடியிருப்புகள் கட்டும் பணிகளை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெடுகுளா ஊராட்சி பகுதியில் அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் கூடுதல் கட்டிடம், தேனாடு ஊராட்சிக்கு உட்பட்ட குயின்சோலை முதல் கணபதிபுரம் வரை 15-வது நிதிகுழுவின் மூலம் ரூ.2 லட்சம் செலவில் முடிக்கப்பட்ட நடைபாதை, தூய்மை இயக்கத்தின் கீழ் சோலூர்மட்டம் பகுதியில் ரூ.8.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகம், ராஷ்டிர கிராம சுராஜ் அபியான் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை கலெக்டர் அம்ரித் ஆய்வு மேற்கொண்டார்.

கற்பிக்கும் முறை

நெடுகுளா ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், செவிலியர்கள், டாக்டர்களின் பதிவேடுகள் மற்றும் மருந்து பொருட்கள் இருப்பு, காலாவதி தேதி குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து குயின்சோலை அரசு ஆரம்பப் பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை பார்வையிட்டார்.

பின்னர் கரிக்கையூர் உண்டு உறைவிட உயர்நிலை பள்ளிக்கு சென்று மாணவ-மாணவிகளுடன் வகுப்பறையில் அமர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கும் முறை, மாணவர்களின் வாசிப்பு திறனை கலெக்டர் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழையையொட்டி கோத்தகிரி புயல் நிவாரண கூடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் அவசர காலத்தில் பயன்படுத்தும் உபகரணங்களை பார்வையிட்டார். ஆய்வின் போது தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி பொறியாளர் விவேக், தாசில்தார் காயத்ரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story