வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 16 May 2023 9:30 PM GMT (Updated: 16 May 2023 9:30 PM GMT)

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை நேற்று கலெக்டர் கிராந்திகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்படி பெரிய நெகமம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் ஆய்வு கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்படும் ரேஷன் பொருட்களின் விவரம், இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பாமாயில், கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களையும் கேட்டறிந்தார்.

பின்னர் என்.சந்திராபுரம் ஊராட்சியில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளையும், குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.32.10 லட்சத்தில் கட்டப்படும் வகுப்பறை பணிகள், சின்னேரிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளயில் ரூ.24 லட்சத்தில் வகுப்பறை கட்டும் பணி, அனுப்பர்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.32.10 லட்சத்தில் கட்டப்படும் கூடுதல் வகுப்பறை பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.

தறி நெசவு

அதனைத்தொடர்ந்து பெரியநெகமம் பேரூராட்சியில் திருமாக்காள் வீதியில் உள்ள சாரதி என்பவரது வீட்டில் தறி நெசவு செய்யப்பட்டுவருவதை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது தறி நெசவு செய்ய பயன்படும் நூல், செலவு, கூலி விவரங்கள், தயாரிக்கப்படும் சேலைகள் விற்கப்படும் விவரங்கள் குறித்து நெசவாளர் குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது பெரிய நெகமம் பேரூராட்சி செயல் அலுவலர் கே.பத்மலதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ், முத்துமணி, ஒன்றிய பொறியாளர் தாமோதரதாஸ், உதவி பொறியாளர்கள் ரகுநாதன், ஜெயராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story