ரூ.2½ கோடியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
நெமிலி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் வளர்மதிஆய்வுசெய்தார்.
கலெக்டர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட பனப்பாக்கம், மேலபுலம், துறையூர், வெளிதாங்கிபுரம், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மேலபுலம் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ரூ.1 கோடியே ஒரு லட்சத்தில் நடைபெற்றுவரும் மறுசீரமைப்பு பணிகளையும், புதிதாக கட்டப்படும் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி, பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பள்ளி வகுப்பறை
அதைத்தொடர்ந்து பனப்பாக்கம் பேரூராட்சி தென்மாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டிடம் ரூ.30 லட்சத்திலும், ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தொடக்கப்பள்ளி சமையல் கூடத்தினையும், நெல்லூர்ப்பேட்டை தொடக்கப்பள்ளியில் ரூ.30 லட்சத்தில் கட்டப்படும் இரண்டு வகுப்பறை கட்டிடம், துறையூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டிட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மேலபுலம் ஊராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை அரைக்கும் மையம், வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். மேலும் காட்டுப்பாக்கம் அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.3.90 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சைக்கிள் நிறுத்தத்தை பார்வையிட்டார்.
ஆய்வின்போது திட்ட இயக்குனர் லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், சிவராமன், உதவிப் பொறியாளர் ராஜேஷ், தாசில்தார் பாலச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.