திருச்சிற்றம்பலம்-காசிப்பாளையம் இடையே சாலை மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு


திருச்சிற்றம்பலம்-காசிப்பாளையம் இடையே சாலை மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 15 Oct 2023 12:15 AM IST (Updated: 15 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்சிற்றம்பலம்-காசிப்பாளையம் இடையே சாலை மேம்பாட்டு பணிகளை கலெக்டர் பழனி ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம்

சாலை பணிகள்

வானூர் தாலுகாவில் தமிழ்நாடு மாநில எல்லையையும், புதுச்சேரி மாநில எல்லையையும் இணைக்கும் மற்றொரு முக்கிய சாலையாக திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை- காசிப்பாளையம்- பூத்துறை-மேட்டுப்பாளையம் மற்றும் பூத்துறை- பெரம்பை ஆகிய சாலைகள் உள்ளது. இந்த சாலையில் பள்ளி- கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் ஊசுட்டேரி சுற்றுலாத்தளம், பறவைகள் சரணாலயம் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கும் இந்த சாலை பயன்படுத்தப்பட்டு வருவதால் போக்குவரத்து நெரிசலுடன் உள்ளது. இந்த சாலையை அகலப்படுத்தவும், பழைய பாலங்களை புதுப்பித்து புதிய பாலங்களை கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள், நீண்டகாலமாக கோரிக்கை வைத்தனர்.

கலெக்டர் ஆய்வு

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ், இக்கோரிக்கை கொண்டு வரப்பட்டு திருச்சிற்றம்பலம்-காசிப்பாளையம் வரை உள்ள 3 கி.மீ. நீள சாலையை 3 மீட்டரிலிருந்து 5 மீட்டராக அகலப்படுத்தவும், பழைய பாலங்களை மேம்பாடு செய்வதற்கும் ரூ.6 கோடியே 85 லட்சம் மதிப்பில் அரசு ஒப்புதல் அளித்தது.

இதன் அடிப்படையில் தற்போது சாலை மற்றும் பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறும், தரமான முறையில் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். மேலும் அவர் கூறுகையில், காசிப்பாளையம் முதல் பூத்துறை வரையுள்ள 2 கி.மீ. சாலை ரூ.2.96 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்படவுள்ளது. அதுபோல் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக பூத்துறை-மேட்டுப்பாளையம் சாலையானது ரூ.1 கோடியே 69 லட்சம் மதிப்பிலும், பூத்துறை-பெரம்பை சாலையானது ரூ.72 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலும் சாலை மேம்பாட்டு பணிகளை செய்வதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோரப்பட உள்ளது என்றார்.


Next Story