கம்மாபுரம் ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


கம்மாபுரம் ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 11 Oct 2023 6:45 PM GMT (Updated: 11 Oct 2023 6:45 PM GMT)

கம்மாபுரம் ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

கடலூர்

கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வந்தார். தொடர்ந்து அவர் கார்கூடல் ஊராட்சியில் உள்ள வண்ணான்குளத்தை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கார்கூடல் - குமாரமங்களம் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மதிய உணவை சாப்பிட்டார்

தொடர்ந்து, கோ.ஆதனூர் ஊராட்சியில் சொட்டவனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தை பார்வையிட்டு மாணவர்களுக்கு சமைக்கப்பட்டிருந்த மதிய உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். அதன் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.1.82 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.

விரைந்து முடிக்க உத்தரவு

மேலும், அந்த ஊராட்சியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், கோபாலபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பாட்டகுளம் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அந்த பணிகள் அனைத்தையும் விரைவாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story