வைகை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு


வைகை ஆற்றின் குறுக்கே  அணை கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வைகை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவகங்கை


வைகை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில், நீர்வளத்துறையின் சார்பில் மானாமதுரை மற்றும் திருப்புவனம் ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரதான கால்வாய்களில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

மானாமதுரை வட்டம், கட்டிக்குளம், மிளகனூர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கும் பொருட்டு வைகை ஆற்றின் குறுக்கே ரூ.30 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த அணைக்கட்டு கட்டுவதால் கட்டிக்குளம், முத்தனேந்தல், மிளகனூர், துத்திக்குளம், கிருங்காக்கோட்டை, கீழமேல்குடி, கால்பிரிவு மற்றும் மானாமதுரை ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு, இதன் மூலம் 6 ஆயிரத்து 316.10 ஏக்கர் பயன்பெறும்.

அணை கட்டும் பணி

மேலும், பதினெட்டான்கோட்டை, வாகுடி மற்றும் செம்பராயனேந்தல் ஆகிய கிராமங்களில் உள்ள குடிநீர் மற்றும் விவசாய கிணறுகளுக்கு நிலத்தடி நீர் செரிவூட்டப்படும். இத்திட்டத்தின் மூலம் வாகுடி, பதினெட்டான்கோட்டை, செம்பராயனேந்தல், கட்டிக்குளம், பெரும்பச்சேரி, முல்லைக்குளம், ராஜகம்பீரம், கொம்புக்காரனேந்தல், மிளகனூர், தீத்தான்பேட்டை, கஞ்சிமடை, முத்தனேந்தல், துத்திக்குளம், கீழமேல்குடி, மானாமதுரை, கிருங்காக்கோட்டை, கால்பிரிவு ஆகிய கிராம மக்கள் பயன்பெறுவார்கள்.

இதே போல், மானாமதுரை வட்டம், கீழப்பசலை மற்றும் இதர 3 கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கும் பொருட்டு வைகை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடியே 86 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் தமிழக அரசால் வைகை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இதன் மூலம் கீழப்பசலை, மேலப்பசலை, ஆதனூர் மற்றும் சங்கமங்கலம் ஆகிய கண்மாய்களுக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு, 1352.20 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

பயன்பெறும்

மேலும் கால்பிரிவு, மானாமதுரை, வி.கரிசல்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள குடிநீர் மற்றும் விவசாய கிணறுகளுக்கு நிலத்தடி நீர் செரிவூட்டப்படும். இந்த திட்டத்தின் மூலம், மானாமதுரை, கீழப்பசலை, மேலப்பசலை, ஆதனூர், சங்கமங்கலம், வி.கரிசல்குளம், கல்குறிச்சி, கால்பிரிவு ஆகிய கிராம மக்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் மழைக்காலங்களில் வைகை ஆற்றில் வெள்ள நீர் செல்லும் போது மேலப்பசலை கண்மாய் வழியாக வறண்ட கண்மாய்களான சோமாத்தூர், எம்.கரிசல்குளம், மானங்காத்தாள், புலிக்குளம் ஆகிய கண்மாய்களுக்கு வெள்ள நீர் திருப்பி விடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, நீர்வளத்துறை (சருகனியாறு கோட்டம்) செயற்பொறியாளர் .பாரதிதாசன் மற்றும் பலர் உடனிருந்தனர்


Next Story