திருமானூர் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு


திருமானூர் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
x

திருமானூர் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், வாரணவாசியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பிள்ளையார் குட்டை ஏரி தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் பணிகளை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து வாரணவாசி சமத்துவபுரத்தில் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.4.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலையின் தரம் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மயானத்தில் நடைபெற்றுவரும் சுற்றுச்சுவருடன் கூடிய சிமெண்டு சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டு சாலை மற்றும் சுற்றுசுவர்களுக்கு பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, சுள்ளங்குடி கிராமத்தில், விரிவான பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிட கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு புற நோயாளிகள் பதிவேடு, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகைப்பதிவேடு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்து இருப்பு, மருத்துவமனை தூய்மை, சுகாதாரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆய்வு செய்து நோயாளிகளுக்கு தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.


Next Story