வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 10 Oct 2023 6:45 PM GMT (Updated: 10 Oct 2023 6:46 PM GMT)

சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

வளர்ச்சி பணிகள்

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீர்காழி கீழத்தெருவில் உள்ள அய்யனார் குளத்தில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி, சுற்றுச்சுவர், நடைபாதை, விளக்கு வசதி உள்ளிட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை மழைக்காலத்திற்குள் தரமாக விரைந்து முடிக்க பொறியாளர் பாபுவிடம் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஈசானிய தெருவில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான உறக்கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் எந்திரம் மூலம் உரம் தயாரிக்கும் பணி மற்றும் மக்கும் குப்பை மக்காத குப்பை தயார் செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் குப்பைகள் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பட்டாசு தொழிற்சாலையில் ஆய்வு

தொடர்ந்து பழைய பஸ் நிலையம் அருகில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து நெடுஞ்சாலை துறையினரை சாலையை சரி செய்ய கேட்டுக் கொண்டார். பின்னர் திட்டை ஊராட்சிக்குட்பட்ட ஆறுமுக வேலி கிராமத்தில் தனியார் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்த விவரங்களை கேட்டு அறிந்தார். மேலும் பட்டாசு தயாரிக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஆய்வின் போது உதவி கலெக்டர் அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் இளங்கோவன், நகராட்சி பொறியாளர் பாபு, பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், நகர்மன்ற உறுப்பினர் பாஸ்கரன், ஒப்பந்தக்காரர் தன்ராஜ், தி.மு.க. மாவட்ட நிர்வாகி செந்தில் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

கொள்ளிடம்

தொடர்ந்து கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியில் ரூ 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஊராட்சியில் அரசு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனைத் தொடர்ந்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைத்து ஊராட்சிகளிலும் அரசு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அப்போது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகாதமிழ்செல்வன், ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் ஒன்றிய ஆணையர் தியாகராஜன். வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி. ஒன்றிய பொறியாளர்கள் பலராமன் தாரா பூர்ண சந்திரன். ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் துணைத்தலைவர் ,சிவபிரகாசம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story