தரிசு நில மேம்பாட்டு திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு


தரிசு நில மேம்பாட்டு திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
x

ஆற்காடு ஊராட்சி ஒன்றியங்களில் தரிசு நில மேம்பாட்டு திட்டப்பணிகளை கலெக்டர் வளர்மதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு ஊராட்சி ஒன்றியங்களில் தரிசு நில மேம்பாட்டு திட்டப்பணிகளை கலெக்டர் வளர்மதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் ஆயிலம் ஊராட்சி ஆயிலம் புதூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22-ல் விவசாயிகளின் தரிசு நிலங்களை மேம்படுத்தி விவசாயம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலை துறையின் மூலமாக மாஞ்செடிகள் நடப்பட்டுள்ளதையும், வேளாண் பொறியியல் துறையின் மூலம் ரூ.91 ஆயிரத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்புடன் சொட்டுநீர் பாசனம் வழங்கப்பட்டு உள்ளதையும் கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது விவசாயிகள் நிலத்தை சுற்றி வேலி அமைத்துக் கொடுத்தால் ஆடு, மாடு, காட்டுப்பன்றிகள் தொந்தரவினை தவிர்க்க முடியும் என தெரிவித்தனர். இதற்கு வங்கிகள் மூலம் கடன் உதவி பெற்று வேலி அமைக்க உதவி செய்யப்படும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து மேலகுப்பம் ஊராட்சியில் 27 விவசாயிகளின் 30 ஏக்கர் தரிசு நிலங்கள் மேம்படுத்தும் திட்டத்தில் முதற்கட்டமாக 11 விவசாயிகளின் 10.10 ஏக்கர் பரப்பளவிலான தரிசு நிலங்கள் சீரமைக்கப்பட்டு முதற்கட்டமாக சேகர் என்பவரது விவசாய நிலத்தில் சொட்டு நீர்பாசனம் அமைத்து மாஞ்செடிகள் நடப்பட்டுள்ளது.

வேளாண் உபகரணங்கள்

பொறியியல் துறையின் மூலம் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைத்து மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

மற்ற விவசாயிகளின் தரிசு நிலங்களில் மாஞ்செடிகள் நடவு பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்களுடைய சொந்த செலவில் காட்டுப் பன்றிகளிடம் இருந்து தோட்டத்தை காப்பாற்றிட தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனர். இந்த பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

இதனையடுத்து ஆற்காடு சக்கரமல்லூர் ஊராட்சியில் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்களையும், தென்னங்கன்றுகளையும் வழங்கினார்.

ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, ஆற்காடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், துணை இயக்குனர்கள் லதா, மகேஷ், விஸ்வநாதன், உதவி பொறியாளர்கள் ரூபன், குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரபாவதி, ஜெயப்பிரகாஷ் பாஸ்கரன், விஸ்வநாதன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story