ஜல் ஜீவன் மிஷன் திட்ட குடிநீர் குழாய் இணைப்புக்கான பங்கு தொகையை ஊராட்சியில் செலுத்த வேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்


ஜல் ஜீவன் மிஷன் திட்ட    குடிநீர் குழாய் இணைப்புக்கான பங்கு தொகையை ஊராட்சியில் செலுத்த வேண்டும்    பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
x

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீர் குழாய் இணைப்பு பெற்ற பொதுமக்கள் அதற்கான பங்கு தொகையை ஊராட்சியில் செலுத்த வேண்டும் என கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.

கடலூர்


இதுதொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜல் ஜீவன் மிஷன் திட்டம்

கடலூர் மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டில் 147 ஊராட்சிகளில் உள்ள 486 குக்கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு வழங்க அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 18.8.2020 அன்று தொடங்கிய குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணி 30.6.22 அன்றுடன் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் 90 சதவீதம் மட்டும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மீதமுள்ள தொகையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை கொண்ட குக்கிராமங்களில் மதிப்பீட்டில் 5 சதவீதமும், இதர பிரிவினர் வசிக்கும் குக்கிராமங்களில் 10 சதவீதமும் சமூக பங்களிப்பாகவும் வழங்கப்பட வேண்டும் என ஜல் ஜீவன் மிஷன் திட்ட வழிக்காட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கு தொகையை செலுத்தவேண்டும்

மேலும் கடலூர் மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குக்கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, குடிநீர் குழாய் இணைப்புகள் பெறப்பட்ட அனைத்து வீடுகளிலும் பொதுமக்கள் பங்குத் தொகையை வசூல் செய்யுமாறு ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலா ளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஜல் ஜீவன் மிஷன் நடைமுறைப்படுத்தப்பட்ட குக்கிராமங்களில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் 5 சதவீதமும், இதர பிரிவினர் என்றால் 10 சதவீத பங்குத் தொகையை ஊராட்சியில் செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story