அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் கலெக்டர் கார்மேகம் வேண்டுகோள்
சேலம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம்,
கலெக்டர் ஆய்வு
மேச்சேரி அருகே கூணான்டியூர் மற்றும் திப்பம்பட்டி ஆகிய காவிரி கரையோர பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை நேற்று கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை ஏற்கனவே எட்டியுள்ள நிலையில் தற்பொழுது அணைக்கு வரும் நீர் அனைத்தும் உபரிநீராக தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், அணைக்கு அதிக அளவில் நீர்வரத்து உள்ளது. எனவே, காவிரி கரையோர பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி சிலைகளை கரைக்க வரும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.
நீர்நிலைகளில்
தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. இத்தகைய சூழலில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க வருபவர்கள் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். குறிப்பாக, சிறுவர்களை நீர்நிலைகளுக்குள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்க கூடாது.
காவல் துறை, வருவாய்த் துறை மற்றும் தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நீர்நிலைகளிலும் முன்னெச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
கூணான்டியூர்-திப்பம்பட்டி
குறிப்பாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேச்சேரி, ஓமலூர், வெள்ளாறு, சேலம் மாநகர், கூணான்டியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூணான்டியூர் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். அதேபோல், திப்பம்பட்டி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, வனவாசி, தாரமங்கலம், குஞ்சாண்டியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது விநாயகர் சிலைகளை திப்பம்பட்டி காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் கரைப்பதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.
ஆய்வின்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், மேட்டூர் தாசில்தார் முத்துராஜா ஆகியோர் உடனிருந்தனர்.