விபத்தை ஏற்படுத்திய லாரியை துரத்தி சென்று மடக்கி பிடித்த கலெக்டர் கார்மேகம்


விபத்தை ஏற்படுத்திய லாரியை துரத்தி சென்று மடக்கி பிடித்த கலெக்டர் கார்மேகம்
x
தினத்தந்தி 14 Sept 2023 1:15 AM IST (Updated: 14 Sept 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

சங்ககிரி அருகே விபத்தை ஏற்படுத்திய லாரியை துரத்தி சென்று கலெக்டர் கார்மேகம் மடக்கி பிடித்தார். காயம் அடைந்தவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

சேலம்

சங்ககிரி:-

சங்ககிரி அருகே விபத்தை ஏற்படுத்திய லாரியை துரத்தி சென்று கலெக்டர் கார்மேகம் மடக்கி பிடித்தார். காயம் அடைந்தவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். சினிமாவை மிஞ்சும் வகையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

டிரைவர் காயம்

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் நடந்து வரும் அரசு திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தனது காரில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். சங்ககிரி அருகே மோடிக்காடு என்ற இடத்தில் வந்தபோது, எதிரே அளவுக்கு அதிகமாக வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது.

அந்த லாரி, எதிரே செம்மறி ஆடுகளை ஏற்றி வந்த மினி வேன் மீது உரசியபடி சென்றது. மினி வேனை ஓட்டி சென்ற டிரைவர் பழனி (வயது 47) என்பவரின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மடக்கி பிடித்த கலெக்டர்

உடனே பழனி சாதுர்யமாக மினிவேனை நிறுத்தினார். ஆனால் வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி நிற்காமல் சென்றது. இதைக்கண்ட கலெக்டர் கார்மேகம் டிரைவரை உடனே காரை நிறுத்தும்படி கூறினார். காரில் இருந்து இறங்கி காயம் அடைந்த பழனியை சிகிச்சைக்கு அழைத்து செல்லுமாறு உடன் இருந்தவர்களிடம் கூறினார்.

பின்னர் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வைக்கோல் லாரியை பிடிக்க கலெக்டர் முடிவு செய்தார். டிரைவரிடம் காரை வேகமாக ஓட்ட சொன்னார். கலெக்டர் காரும், வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரியை துரத்தி சென்றது. லாரி டிரைவரும், அரசு வாகனம் ஒன்று துரத்துவது தெரிந்து லாரியை வேகமாக ஓட்டினார். அப்படி இருந்தும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வைக்கோல் லாரியை கலெக்டர் கார் மடக்கியது. இந்த சம்பவத்தால் அந்த சாலையில் சினிமாவை மிஞ்சும் வகையில் பரபரப்பாக காணப்பட்டது.

எச்சரிக்கை

பின்னர் லாரியை ஓட்டியவரிடம் விசாரணை செய்தார். விசாரணையில் லாரியை ஓட்டி சென்றது மணிகண்டன் என்பதும், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டுக்கு லாரியை ஓட்டி சென்றது தெரிய வந்தது. மேலும் விபத்தை ஏற்படுத்தியதுடன், நிற்காமல் சென்றது ஏன் என்று கேள்வி கேட்டதுடன், லாரி டிரைவரை கடுமையாக கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை செய்தார்.

பின்னர் வைக்கோல் லாரியை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் பறிமுதல் செய்து சங்ககிரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க கலெக்டர் கார்மேகம் நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து அதிவேகமாக வாகனத்தை ஓட்டியது, விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மணிகண்டன் மீது சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

தொடர்ந்து படுகாயம் அடைந்து கை வலியால் துடித்த பழனியை கலெக்டர் கார்மேகம் சிகிச்சைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கிருந்த டாக்டர்களிடம் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது, அந்த டிரைவருக்கு ஏற்கனவே ஒரு கை இல்லாததும், செயற்கையான கை பொருத்தி வாகனத்தை ஓட்டி சென்றதையும் கண்டு கலெக்டர் வேதனை அடைந்தார். தொடர்ந்து டிரைவர் பழனிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர், கலெக்டருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

டிரைவர்கள் மீது நடவடிக்கை

இதை தொடர்ந்து கலெக்டர் கார்மேகம் கூறுகையில், சாலை விபத்துகள் ஏற்படாத வகையில் காவல்துறை, போக்குவரத்துத்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும் சாலை விதிகளை கண்டிப்பாக பின்பற்றினால் மட்டுமே, விபத்தில்லாத பயணம் சாத்தியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். சாலை விதிகளை பின்பற்றாமல் விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டப்பட்டுள்ளது என்றார்.


Next Story