கலெக்டர் கார்த்திகேயன் தேசியக்கொடி ஏற்றினார்


கலெக்டர் கார்த்திகேயன் தேசியக்கொடி ஏற்றினார்
x

நெல்லையில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் கார்த்திகேயன் தேசியக்கொடி ஏற்றினார். இதையொட்டி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருநெல்வேலி

நெல்லையில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் கார்த்திகேயன் தேசியக்கொடி ஏற்றினார். இதையொட்டி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சுதந்திர தினவிழா

இந்தியாவின் சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் காலை 9.05 மணிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது போலீஸ் இசைக்குழு சார்பில் பேண்டு வாத்தியத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து கலெக்டர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், ஆயுதபடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேசுவரி ஆகியோர் உடன் சென்றனர். பின்னர் போலீசார், தீயணைப்பு படையினர், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகள் வரிசையாக அணிவகுத்து வந்து கலெக்டருக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் பலூன்களை கலெக்டர் பறக்க விட்டார்.

பாராட்டு சான்றிதழ்கள்

இதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை, தமிழ் வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைதுறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றின் சார்பில் மொத்தம் 60 பேருக்கு ரூ.27 லட்சத்து 28 ஆயிரத்து 202-க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து நெல்லை மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, வடக்கு செழியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சேரன்மாதேவி அரசு உயர்நிலைப்பள்ளி, பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, வடக்கன்குளம் எஸ்.ஏ.வி.பாலகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கலந்துகொண்டவர்கள்

விழாவில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை போலீஸ் கமிஷனர்கள் சரவணகுமார், அனிதா, மாவட்ட வருவாய் அலுவலர்கள் செந்தில்குமார், சுகன்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், நெல்லை மருத்துவ கல்லூரி டீன் ரேவதிபாலன், டாக்டர் பாலசுப்பிரமணியன், வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜ்குமார் அருளானந்தம், சங்கர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன், ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஜெயமேரி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.


Next Story