பள்ளிகளில் கலெக்டர் கே.எம்.சரயு நேரில் ஆய்வு
ஓசூர் சமத்துவபுரம்- சித்தனப்பள்ளி பள்ளிகளில் கலெக்டர் கே.எம்.சரயு நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.
ஓசூர்:-
ஓசூர் சமத்துவபுரம்- சித்தனப்பள்ளி பள்ளிகளில் கலெக்டர் கே.எம்.சரயு நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.
பள்ளிகளில் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியம் சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் சித்தனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்ட பணிகளை கலெக்டர் கே.எம்.சரயு நேரில் ஆய்வு செய்தார். 1 முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி சமைக்கப்படுவதையும், உணவு வழங்கப்படுவதையும் நேரில் பார்வையிட்டார்.
உணவு சமைப்பதற்கான பொருட்களான காய்கறிகள், ரவை, அரிசி, பருப்பு உள்ளிட்டவை தரமாக உள்ளதா? என்பதை கேட்டறிந்தார். மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாகவும், சுவையாகவும் வழங்கப்பட வேண்டும். சமையலறை மற்றும் மாணவர்கள் அமர்ந்து உணவு அருந்துமிடம் சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
தொடர்ந்து ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அந்த பணிகளுக்கான பதிவேடுகளையும் நேரில் பார்வையிட்டு மக்கள் நல பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் கே.எம்.சரயு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து ஓசூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் சூளகிரி தாலுகா, காமன்தொட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு அஞ்சலகத்தில் புதிய வங்கி கணக்கு தொடங்கும் முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாந்தா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசமூர்த்தி, பூபதி, தாசில்தார்கள் சுப்ரமணி, சக்திவேல், ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.